வேலூர்,
வேலூரை அடுத்த மேல்மொணவூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 32). இவருடைய மனைவி ஜெயந்தி (29). இவர்களுக்கு சுவேதா (7), நிஷா (5) என்ற 2 பெண்குழந்தைகளும், ஜீவித் (6) என்ற ஆண்குழந்தையும் உள்ளனர். ஜெயந்தி ஷூ கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.
மகள் சுவேதா அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பும், ஜீவித் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கட்டிட மேஸ்திரி வேலைபார்த்து வந்த குமரன் கடந்த 3 வருடங்களாக சேலை கட்டிக்கொண்டு குறி சொல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஜெயந்தி, தனது 3 குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நுழைவுவாயிலில் பெண்போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அதனால் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லாமல் நுழைவுவாயில் அருகிலேயே ஜெயந்தி பாட்டிலில் கொண்டுவந்திருந்த மண்எண்ணெயை தனது உடலிலும், குழந்தைகள் உடலிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதனைபார்த்த பெண்போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஓடிச்சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவர்கள்மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் கடந்த 3 வருடங்களாக சேலைகட்டிக்கொண்டு குறிசொல்வதாகவும், தெருவில் செல்லும்போதும் சேலைக்கட்டி செல்வதாகவும் கூறினார். சேலைகட்டக்கூடாது என்று பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.
இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும், தனக்கும் மனவேதனையாக இருக்கிறது. எனவே தற்கொலைசெய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.